விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை ஆசை வார்த்தைகள் பேசி தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜாமின் பெற்று வெளிவந்த நிர்மலா தேவிக்கு வழக்கு விசாரணைக்காக இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு நிர்மலா தேவி ஆஜரானார்.
கடந்த முறை வழக்கு விசாரனையின் போது, சுடிதார் அணிந்து கொண்டு வந்தவர், இந்த முறை சுடிதாருக்கு உடுத்தும் பேண்ட் அணிந்துக் கொண்டு அதற்கு மேற் சேலை கட்டிக்கொண்டு வந்தார். அவரின் இந்த வித்தியாசமான நடவடிக்கை பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
நீதிமன்றத்தில் ஆஜரான பின்பு வெளிவந்த நிர்மலா தேவி, நீதிமன்ற வளாகத்திலேயே அமர்ந்து முதலில் தியானம் செய்வதாக கூறியுள்ளார். பின்னர், தனக்கு சாமி வந்துவிட்டதாகவும், காணிக்கை செலுத்தவேண்டும் என சாமி கூறியதாக கற்பனை விசயங்களை அடுக்கிகொண்டே சென்றார்.
அவர்களது உறவினர்களின் முறையை தவறாக உச்சரித்து அருகில் இருந்தவரிடம் மாட்டிக்கொண்டார், ஆனாலும் அதனை சமாளித்து, மீண்டும் தனது பேச்சைத் தொடங்கினார். அப்போது தனக்கு 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்துவிட்டதாகவும், விடுதையாகி விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதனையடுத்து அவருக்கு எதிராக குற்றம் சாட்டிய மாணவர்களின் பெயர்களை ஒவ்வென்றாக கூறி, அவர்கள் தூக்குப்போட்டு இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அருகில் இருப்பவர்கள் அவர்கள் நலமாக தான் இருக்கிறார்கள் என கூற, அதற்கு மீண்டும் அவர்கள் இறந்துவிட்டதாக கூறுகிறார்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிர்மலா தேவி தன்னுடைய வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ள இதுபோல கற்பனையில் பேசி நாடகத்தை ஜோடித்து வருவதாக மாதர் அமைப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நிர்மலா தேவி மீதான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவிகளிடம் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பெறவில்லை என்றும், நிர்மலா தேவி யாருக்காக அவ்வாறு பேசினார் என்பதும் விசாரிக்கப்பட வில்லை என்றும் மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால், விசாரணை முறையாக நடைபெறுவதால் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீதும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.