சமூக செயற்பாட்டாளர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காணாமல் போனார். அவரை கண்டுபிடித்து தரக்கோரி ஹென்றி திபேன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
முகிலன் காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போன முகிலனை திருப்பதியில் பார்த்ததாக முகிலனின் பள்ளித் தோழர் சண்முகம் சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முகிலன் திருப்பதி ரயில்வே காவல்துறையினர் அழைத்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் முகிலன் தாடியுடன் காணப்படுகிறார். ரயில்வே போலீஸார் அவரை கைது செய்து இழுத்து செல்லும் போது, ஸ்டெர்லைட் மற்றும் கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடியே முகிலன் செல்கிறார்.
முதற்கட்ட தகவலின் படி, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்ததால் முகிலனை போலீஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்த போது அவர் முகிலன் என்பதை போலீஸார் அறியவில்லை என்று கூறப்படுகிறது.