2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில், மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், இந்திய அரசுக்கு 2019 - 20 நிதியாண்டில் வரப் போகும் மொத்த வரி வருவாய் 16 லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். மத்திய அரசுக்கு வர இருக்கும் வரி அல்லாத, பிற வருவாய் 3 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவை தவிர, இந்தியா வசூலிக்க வேண்டிய கடன் வருவாய் உள்ளிட்ட மற்ற சில வழியாக 1 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சேர்த்தால், இந்திய அரசுக்கு வரும் மொத்த வருவாய் 20 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், இந்த வருமானத்தை வைத்து மட்டுமே இந்தியாவை நிர்வகிக்க முடியாது.
2019 - 20 நிதியாண்டில் 7 லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப்பற்றாக் குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கடனாக பெற இந்திய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கடன் கிடைத்தால்தான் இந்தியாவின் அத்தியாவசியத் தேவைகளையே சரி செய்ய முடியும் என்ற அளவுக்கு நிதிப் பற்றாக்குறை மிகமோசமான நிலைக்கு மோடி அரசுக் கொண்டுபோய் சேர்த்துள்ளது.
மேலும் 2019 - 20 நிதியாண்டில், இந்திய அரசு சுமார் 7 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்குகிறது. ஆனால், ஏற்கெனவே வாங்கியிருக்கும் கடன்களுக்கு வட்டியாக மட்டும் 6 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாயை, இந்தியா செலுத்த வேண்டியது உள்ளது. அதாவது, ஏற்கெனவே வாங்கிய கடனுக்கான வட்டி 6 லட்சத்து 60 ஆயிரம் கோடியை செலுத்துவதற்கு, ரூ. 7 லட்சத்து 3 ஆயிரம் கோடி புதிதாக இந்தியா கடன் வாங்குகிறது. என்ற தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஆட்சியை விட்டு இறங்கிய பொழுது, கடந்த 2014 ஜூன் மாதத்தில் இந்தியாவின் மொத்தக் கடன் தொகை ரூ. 54 லட்சத்து 90 ஆயிரத்து 763 கோடி யாக இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 2018 செப்டம்பர் வரையிலான நான்கரை ஆண்டுகளுக்குள், இந்த கடன்தொகை ரூ. 82 லட்சத்து 3 ஆயிரத்து 253 கோடியாக அதிகரித்தது.
நாடு விடுதலை அடைந்ததில் இருந்து, சுமார் 67 ஆண்டுகளில் இந்தியா பெற்ற மொத்தக்கடன் ரூ. 54 லட்சம் கோடி என்றால், மோடி அரசு நான்காண்டுகளில் மட்டும் 28 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது. அதற்கு சுமார் 7 லட்சம் கோடி அளவிற்கு வட்டியும் செலுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.