தற்போதைக்கு, தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் முக்கியமான பிரச்னை தண்ணீர் தட்டுப்பாட்டு. ஆனால், தமிழக அரசோ தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் விவகாரத்தில் மிக மெத்தனமாகச் செயல்பட்டு வருகிறது.
மழை பொய்த்துப்போனால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை இந்த ஆண்டு கடும் தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் என முன்கூட்டியே சூழலியாளர்கள் எச்சரித்தும் தமிழக அரசு கண்டுகொள்ளாததன் விளைவையே இப்போது நாம் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.
நீர் மேலாண்மை பற்றிய தெளிவான புரிதல்களற்று, பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அ.தி.மு.க அரசால் தண்ணீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்கூடு.
இந்நிலையில், சூழலியலாளரும், எழுத்தாளருமான நக்கீரன் அவர்கள், தமிழக நீர்க்கொள்கைக்கான முக்கியமான 20 பரிந்துரைகளை தனது புதிய இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். (அவரது இணையதள முகவரி : http://www.writernakkeeran.com
அவர் வெளியிட்டுள்ள பரிந்துரைகளில், குடிநீர் விற்பனையைத் தடை செய்யவேண்டும் எனவும் இதற்கு முன்னோடியாக அரசே புட்டிநீர் விற்பனையைக் கைவிடவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராஜஸ்தானில் இயங்குவது போன்று அரசியல் தலையீடற்று முழுக்கவும் பொதுமக்களே பங்கேற்கும் ‘தண்ணிர் பார்லிமெண்ட்’ ஒவ்வொரு ஊராட்சியிலும் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனியார்மயத்தை ஒழிக்க, முழுக் குடிநீர் விநியோகத்துக்கும் அரசே பொறுப்பேற்கவேண்டும். ‘தண்ணீர் துறை’ என தனி அமைச்சகத்தைத் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட இந்தப் பரிந்துரைகளைச் செயல்படுத்தினால் சென்னையை ‘உபரிநீர்’ நகரமாக மாற்றலாம் எனக் குறிப்பிட்டுள்ளார் நக்கீரன்.