தமிழ்நாடு

நளினிக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல்: எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அதிமுக!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினிக்கு, ஒரு மாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினிக்கு ஒரு மாதம் மட்டுமே பரோல்: எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அதிமுக!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, மகள் திருமணத்துக்காக 6 மாத காலம் பரோல் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கில் தாமே ஆஜராகி வாதாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக நளினி நேரில் ஆஜராகி வாதாட காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒரு வழக்கில் தாமே ஆஜராகி வாதாட அனைவருக்கும் உரிமை உள்ளது எனவும், நளினியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று இந்த மனு மீதான விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகி வாதாடினார். மகளின் திருமணம், கோவில் பிரார்த்தனை என்று நிறைய கடமைகள் இருப்பதால் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்தார். 24 ஆண்டுகளாக நானும் என் கணவரும் சிறையில் உள்ளோம். எனது குழந்தை சிறையில்தான் பிறந்தது. எனது மகளை சீராட்டி பாராட்டி வளர்க்கவில்லை, அவள் பெரியவர்கள் பாதுகாப்பிலேயே வளர்கிறாள் என்று நளினி கண்ணீர் மல்க பேசினார்.

6 மாத பரோலுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. பேரறிவாளனுக்கு ஒருமாதமே பரோல் வழங்கப்பட்டது, 6 மாதம் வழங்க சட்டத்தில் இடமில்லை. ஒரு மாத பரோல் வழங்க தயார் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நளினி தங்க உள்ள இடங்களை ஆய்வு செய்ய கால அவகாசம் வேண்டும். உத்தரவாத கையெழுத்து போட உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நளினிக்கு ஒருமாத பரோல் வழங்கி உத்தரவிட்டார். மேலும், நளினி தங்க உள்ள இடம் குறித்து விசாரணை நடத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஏழு பேரை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நளினி 6 மாத பரோல் கேட்டதற்கு அ.தி.மு.க அரசு அனுமதி மறுத்து ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்கலாம் என நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. இதன்மூலம், எழுவர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க அரசு இரட்டை வேடம் போடுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories