தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரயிலின் ஏசி வகுப்புகளில் தொடர்ச்சியாக நகைகள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையனைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதனையடுத்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி கொள்ளையனைத் தேடிவந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டார். அவர் கேரள மாநிலம் திருச்சூரைசேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வரும் சாகுல் ஹமீது இந்தியாவிற்கு விமானம் மூலம் வந்து ரயில் ஏசி பெட்டிகளில் முன்பதிவு செய்து, அடிக்கடி பயணிப்பதும் தெரியவந்தது. அவ்வாறு பயணிக்கும்போது, தூங்கிக் கொண்டிருக்கும் பெணிகளிடம் இருந்து நகைகளை திருடி வந்துள்ளார். கடந்த சிலஆண்டுகளாகவே தொடர்ச்சியாக இந்தச் சம்பவத்தில் சாகுல் ஹமீது ஈடுபட்டிருப்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
அத்துடன் இந்தத் திருட்டு பணம் மூலம் மலேசியாவில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான ஹோட்டலில் இயக்குநராக இருப்பதும் தெரியவந்தது. சாகுல் ஹமீதிடம் இருந்து 110 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து சாகுல் ஹமீதின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது, காவல் ஆய்வாளர் கயல்விழி என்பவர் அவரிடம் இருந்து பணம் பறித்ததாக கூறப்படுகிறது.
சாகுல் ஹமீதின் ஏ.டி.எம். கார்டு மூலம் வங்கிக்கணக்கில் இருந்த ரூ2.5 லட்சம் பணத்தை பெண் ஆய்வாளர் கயல்விழி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண் ஆய்வாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் இன்னும் கூடுதலாக யாரெல்லாம் இதில் உடந்தையாக இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.