தென்னகத்தின் தண்ணீர் தொட்டி என்ற பெருமைக்கு உரிய மாவட்டம் நீலகிரி. ஆனால் இந்த மாவட்டமும் தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து தப்பவில்லை. காரணம், இங்குள்ள சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டதுதான்.
வளர்ச்சி என்ற பெயரில், நீர் நிலைகளை பராமரிக்காமல், தூய்மையான நீரை வழங்கும் சதுப்பு நிலங்களை பராமரிக்காமல் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள், விடுதிகள் என கட்டப்பட்டதே இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணம் எனவும் இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நடப்பு ஆண்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தென்மேற்குப் பருவமழை கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி வருகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மக்களும் குடிப்பதற்கு நீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறு இருக்கையில், கோத்தகிரியில் உள்ள ரைபிள் ரேஞ்ச் என்ற பகுதியில் உள்ள அரசின் முறையற்ற கண்காணிப்பாலும், ஆக்கிரமிப்புகளாலும் 120 ஏக்கர் பரப்பளவில் இருந்த சதுப்பு நிலங்கள் தற்போது வெறும் 8 ஏக்கராக உள்ளது. அதுவும் தற்போது அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது.
மலைகளில் இருந்து வழியும் நீரை சேமித்து தூய்மைப்படுத்தி கோத்தகிரி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு பயனளித்தது இந்த ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலங்கள். ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ள சதுப்பு நிலங்களை மீட்க அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.