மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி இன்னும் நடைபெறாத சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் எம்.பி சு.வெங்கடேசன் கடந்த வாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து எய்ம்ஸ் பணியை துரிதப்படுத்தக் கோரி மனு அளித்துள்ளார்.
அதனையடுத்தது மதுரையில் நேற்றையதினம் எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது,"மக்களவையில் பட்ஜெட் தாக்கல் நடக்கவிருப்பதால் அதற்கு முன்னதாக மதுரையின் வளர்ச்சி குறித்தும், தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டம் குறித்தும் கோரிக்கை மனு ஒன்றை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து வழங்கியுள்ளேன்.
மேலும் நீண்டகாலமாக மதுரை மக்களின் கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன், அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர், "இன்னும் 3 ஆண்டுகளில் பணியை முடிப்பதற்கு நிதி எந்த வித தடையுமின்றி வழங்கப்படும்" என்று உறுதியளித்தார். இதை மதுரை மக்களின் பிரதிநிதியாக வரவேற்று நன்றி தெரிவித்ததாக கூறினார்.
மேலும் கோவை, திருப்பூரில் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு ரயில்கள் இயக்க வேண்டும். தேஜஸ் ரயிலின் பெயரை ‘தமிழ்ச்சங்க ரயில்’ எனப் பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். மதுரையில் மெட்ரோ ரயில் இயக்குவது என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். என செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.