மது ஒழிப்பு வலியுறுத்தி கடும் சவால்களை எதிர்கொண்டு வருபவர் சமூகப் போராளி நந்தினி. அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டை முற்றுகையிட முயன்று பல முறை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நந்தினி 2014-ல் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அந்த வழக்கு நேற்றைய தினம் சிவகங்கை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையின் போது நீதிபதிகளிடம் நந்தினி நேரடியாக வாதாடினார். ” IPC 328ன் படி டாஸ்மாக் மூலம் போதை பொருள் விற்பது குற்றமில்லையா?. டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதை பொருளா? உணவு பொருளா? இல்லை மருந்து பொருளா?” என கடுமையான கேள்விகளை எழுப்பினார்.
நீதிபதிகளை எதிர்த்து வாதாடியதால் நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டு மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
நந்தினிக்கு ஜூலை 5ம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. தனது நீண்டநாள் நண்பரான குணா என்பவரை காதல் திருமணம் செய்ய இருக்கிறார் நந்தினி. ஆனால் ஜூலை 9ம் தேதி வரை நந்தினியைம் அவரது தந்தையும் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நந்தினியின் குடும்பத்தினர் உட்பட சமூக ஆர்வலர்கள் பலரு அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து நந்தினியை திருமணம் செய்யவிருக்கும் குணா முகநூலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ”சட்டப்படி போராடுவது தவறு என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் சட்டப்படி டாஸ்மாக் கடைகளையும் நடத்தக்கூடது. 5 வருடத்திற்கு முன்பு துண்டு பிரசுரம் விநியோகிக்கும் போது போலீசாரை தாக்கியதாக நந்தினி மீது பொய் வழக்கு போடப்பட்டது. அந்த வழக்குக்கு இப்போது சாட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் பழிவாங்கும் நோக்கத்தோடு இத்தகைய முயற்சியை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.” என குணா குற்றஞ்சாட்டியுள்ளார்.