தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறாமலேயே சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முக்கியமான அரசியல் சூழலில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.
கூட்டத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க ராதாமணி, சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கனகராஜ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படுகிறது.
இதையடுத்து மீண்டும் ஜூலை 1ம் தேதி (திங்கள்) தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தொடரில் தமிழகம் முழுவதும் குறிப்பாக தண்ணீர் பஞ்சம், நீட் தேர்வில் இருந்து விலக்கு, அறிவிக்கப்படாத மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டம், அணுக்கழிவு, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விவாதம் நடத்த தயாராகி வருகிறார்கள்.
அதேசமயத்தில் சபாநாயகர் தனபால் மீது தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து கடிதம் கொடுத்துள்ளார்.
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதியே (திங்கள்) அதற்கான அஜென்டா வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஜூலை 1ம் தேதி தி.மு.க கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது