மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகிறது.
மும்பை தானா பகுதியில் திவா என்ற இடத்தில் முஸ்லீம் இளைஞர் ஒருவர் இந்துத்துவா கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். அவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டால் விடுவிப்பதாக அவர்கள் மிரட்டி அவரின் காரை சேதப்படுத்தியுள்ளனர்.
25 வயதான மூஸ்லீம் இளைஞர் பைசல் உஸ்மான் கான். தனியார் வாகன நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் உஸ்மான் கான் திவா பகுதியில் உள்ள மனவ் கல்யாண் மருத்துவமனையில் இருந்து பயணிகளை மும்பைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.
போகும் வழியில் திடீரென கார் செயல்பாட்டை இழந்துள்ளது. இதையடுத்து அதனை சரி செய்வதற்கு காரை நிறுத்தியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்த மூன்று நபர்கள் காரின் மீது மோதியுள்ளனர். அவர்களே மோதி இடித்து விழுந்த போதும், காரின் கண்ணாடியை அவர்கள் உடைக்க முயற்சித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த பைசல் உஸ்மான் காரை மீண்டும் எடுக்க முயற்சித்தார். அவர்கள் பைசல் உஸ்மானை தடுத்து அவரிடம் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அவர் முஸ்லீம் என்று தெரிந்ததும் காரில் இருந்த பயணிகளை வெளியேற வற்புறுத்தியுள்ளனர். பின்னர் பைசல் உஸ்மானின் மதத்தை இழிவாக பேசி , ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சத்தமாக கோஷமிட்டால், விடுவிப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து உஸ்மான் தானே பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், மூன்று பேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.