சூழலியல் ஆர்வலர் முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடி சரியான பாதையில் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், முகிலனை மீட்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் 8 வாரம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஆவணப் படத்தை வெளியிட்ட சூழலியல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாயமானார். அவரைக் கண்டுபிடித்து தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 6-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முகிலன் காணாமல் போன விவகாரத்தில் முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் சீலிட்ட கவர் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் சீலிட்ட கவரில் புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முகிலன் எங்கே என இடப்பட்ட பதிவொன்றிற்கு ராஜபாளையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவர் ‘சமாதி’ என பதிலளித்தது குறித்து சந்தேகம் தெரிவித்தார்.
பின்னர், சிபிசிஐடி அளித்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும், வழக்கினை பாதிக்கும் என்பதால் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், 8 வாரங்களுக்குள் முகிலனை மீட்குமாறு சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.