தமிழ்நாடு

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகவுக்குத் துணை போகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு!

காவிரி மேலாண்மை ஆணையம் ஒருபுறம் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இன்னொரு புறம் அதை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசுக்குத் துணை போகிறது, என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகவுக்குத் துணை போகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 2 டி.எம்.சி நீர் மட்டுமே கர்நாடகா வழங்கியது. மேலும் மேகதாதுவில் அணை கட்டும் பணியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் டெல்லி சேவா பவனில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம் ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும், ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி என மொத்தம் 40 டி.எம்.சி நீர் வழங்க உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “காவிரி மேலாண்மை ஆணையம் ஒருபுறம் உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே இன்னொரு புறம் அதை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசுக்குத் துணை போகிறது. இது அப்பட்டமான துரோகம்.

டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரையே இதுவரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான தண்ணீரைத் திறந்து விடுவார்கள் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகவுக்குத் துணை போகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு!

இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து இல்லை , மழை பெய்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இது மறைமுகமாக கர்நாடகாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது.

மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்குக் கண்டனம் எதுவும் தெரிவிக்காத மேலாண்மை ஆணையம் அவர்களுக்குப் பரிந்து பேசுவதாகவும், தமிழகத்துக்கு எதிராக கர்நாடக அரசின் நிலையை நியாயப்படுத்துவதாகவும் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இனிவரும் காலங்களில் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அதன் தலைமையிடமான பெங்களூரிலேயே கூட்டலாம் என்று தமிழக அரசு கருத்து தெரிவித்திருப்பது தமிழக நலனுக்கு எதிரானதாக உள்ளது. பெங்களூருவில் கூட்டம் நடத்தப்பட்டால் அது கர்நாடகாவுக்கே சாதகமாக அமையும்.

எனவே கர்நாடகா அல்லாத ஒரு இடத்தில் கூட்டத்தை நடத்துவதே முறையாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை உடனடியாக கர்நாடக அரசு திறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய கிளர்ச்சி ஏற்படும் என சுட்டிக்காட்டுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories