கர்நாடக சங்கீத பாடகி சுதா ரகுநாதனின் மகள் தன் விருப்பப்படி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணக்க இருக்கிறார். இதையொட்டி, சமூக வலைதளங்களிலும், சில பிராமணிய உட்குழுக்களிலும் சுதா ரகுநாதனைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
புகழ்பெற்ற பாடகியான சுதா ரகுநாதனை தங்கள் சமூகத்தின் பெருமைமிகு அடையாளமாகக் கொண்டிருக்கும் அவர்களுக்கு, அவர்தம் மகளை கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவருக்கு மணமுடித்து வைப்பது ஒப்பவில்லை.
திருமணம் இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் நிலையில், ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் சுதா ரகுநாதனின் கணவரிடம் போன் செய்து மாற்று மதத்தினர் இணையும் இந்தத் திருமணத்திற்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, சுதா ரகுநாதனின் அலைபேசி எண்ணையும் பலர் பகிர்ந்து, அவரது மகள் திருமணத்திற்கு எதிராகப் பேசுமாறு ஊக்குவித்து வருகின்றனர். தங்கள் சாதிப்பெருமையை திருமணத்தின் வழியாக நிலைநிறுத்துவதற்காக தரங்கெட்ட செயலில் ஈடுபட்டு வரும் அவர்களுக்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன.