நாடாளுமன்றத்தின் மக்களவை 6வது நாளாக இன்று கூடியது. அப்போது, கேள்வி நேரத்தின் போது பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, சிலைக் கடத்தலை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர் “ ஏராளமான வழிபாட்டு தலங்களை கொண்டுள்ள மாநிலம் தமிழகம். சிற்பக் கலைக்கும் பெயர் பெற்ற மாநிலமும். ஆனால், இங்குதான் பாரம்பரிய பொருட்களும், சிலைகளும் கொள்ளைப் போவது அதிகமாகியுள்ளது. சிற்பங்கள், பாரம்பரிய சிற்பங்கள், கலைப் பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததே, இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களுக்கு காரணம்” என்று கனிமொழி சாடினார்.
மேலும், எவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது என்றும், எவ்வளவு சிலைகள் இருந்தது என்பதற்கான கணக்கீடு இல்லாமல் போனதே சிலைக்கடத்தலுக்கான காரணம் என தெரிவித்தார்.
சிலைக் கடத்தலை தடுக்க மத்திய அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என கேள்வியெழுப்பிய அவர், கோவில்களையும், சிலைகளையும் கணக்கெடுத்து ஆவணப்படுத்தி, தமிழர்களின் சிற்பக்கலைகளையும், பழங்கால பொருட்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.