தேசிய அளவில் அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் நடத்தும் பொறுப்பு, ஒருங்கிணைப்பு ஆணையமான National Testing Agency என்.டி.ஏ) மேற்கொண்டு நடத்தி வருகிறது. உதவி பேராசிரியர்கள் பணி மற்றும் இளங்கலை ஆராய்ச்சியாளர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான நெட் தகுதி தேர்வை இரண்டாம் முறையாக என்.டி.ஏ., இம்மாதம் நடத்துகிறது. இத்தேர்வுகள் கணினி முறையில் 28ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறப்போகிறது.
இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவையை சேர்ந்த சிலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் படி கோவையைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார். அவர் தேர்வு மையங்களாக கோவை, திருச்சி, சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களை மட்டுமே தேர்வு செய்துள்ளார்.
ஆனால் அவருக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதாக ஹால்டிக்கெட் வந்துள்ளது. இதனால் ஜெயபிரகாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மேலும் அனுபவம் இல்லாத நகரத்திற்கு சென்று தேர்வு எழுதுவது இயலாத காரணம் எனவே இப்பிரச்சனையில் தமிழக அரசு தலையிடவேண்டும் எனவும், தமிழகத்தில் இடம்பெற்றுள்ள தேர்வு மையத்திற்கு மாற்றித்தர வேண்டும் என்றும் தேர்வு ஆணையத்திடமும், தமிழக அரசிடமும் ஜெயபிரகாஷ் கோரிக்கை வைத்துள்ளார்.