தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து, இருபது நாட்களுக்கு ஒருமுறை, மிகக்குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.
ஆனால் அ.தி.மு.க அரசோ, மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது போன்று காட்சிப்படுத்தி வருவது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்னதாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “குடிநீரை பொறுத்தவரை, அ.தி.மு.க அரசு தொடர்ந்து, லாரிகள் மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது. நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டதால், குடிநீர் வாரியம் வழங்கும் நீரைத்தான் குளிப்பதற்கு, துவைப்பதற்கு என எல்லா தேவைகளுக்கும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்” எனக் கூறினார்.
பின்னர் பேசிய அவர், "ஏதோ ஒரு இடத்தில் பிரச்சினை இருந்தால், அதை பெரிதுபடுத்தி, தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்சினை இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை , தண்ணீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார். முதல்வரின் இந்தப் பேச்சு மக்களை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. முதல்வரின் பேச்சுக்கு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லை என முதல்வர் கூறி 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், சரியாக மழை இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. மேலும் 4 மாதம் தண்ணீர் விநியோகிக்க வேண்டிய தேவை இருப்பதால் போதுமான அளவு தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்படுவதாகவும், தண்ணீர் பஞ்சம், தட்டுப்பாடு இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் முறையாக குடிநீர் வழங்குவதில் சிரமம் உள்ளது. ஏனென்றால் அரசிடம் தண்ணீர் லாரிகள் குறைவாகவே உள்ளன. குறைவாக உள்ள லாரிகளை வைத்து எவ்வளவு விநியோகிக்கப்படுமோ அதை தான் அரசு செய்கிறது என தெரிவித்தார். இது குடிநீர் விநியோகிப்பதில் அ.தி.மு.க அரசு தோல்வியடைந்ததையே காட்டுகிறது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எந்தப் புதிய திட்டத்தையும் எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர் பஞ்சம் இல்லை என்றவர் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது என பேசிவருகிறார். இப்படி மாற்றி மாற்றிப் பேசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இருக்கிறதா இல்லையா என்பதையாவது தெளிவாகச் சொல்லும்படி பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.