தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்த சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து நாட்களுக்கு ஒருமுறை, மிகக் குறைந்தளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் 90% பகுதிகளுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. மாநில அரசு தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யப் போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து மக்கள் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தண்ணீர் இல்லாததால் கழிவறைகளை நிர்வாகம் பூட்டி விட்டு சென்றதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு மாநகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறையால் போதுமான அளவில் தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை என அங்கு பணி புரிபவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தில் புறநோயாளிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர், அங்கு உள்ள கழிப்பறையை தான் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்றில் இருந்து 2 கட்டிடங்களின் தரைத்தளத்தில் உள்ள கழிப்பறைகள் பூட்டி இருப்பதாக நோயாளிகள் புகார் அளித்துள்ளனர். ஆனால், இதனைக் கண்டு கொள்ளாமல் நிர்வாகம் செயல்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து, நோயாளி ஒருவர் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் அந்த கட்டிடத்தில் சோதனைக்காக சிறுநீரை பாட்டிலில் சேகரிக்க சென்றுள்ளார். அங்கு கழிவறைகள் மூடப்பட்டிருந்ததால் உள்ளே அனுமதித்திக்குமாறு கோரியுள்ளார். ஆனால் அந்த வார்ட் ஊழியர்கள் அவரை அங்கு அனுமதிக்காததால் மன உளைச்சல் அடைந்துள்ளார்.
பின்னர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் அந்த முதியவருக்கு உதவியுள்ளார். பெண் ஊழியர் உதவியுடன் பெண் நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறைக்குள் சென்று தனது சிறுநீரை பாட்டிலில் சேகரித்துள்ளார்.
தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். சென்னையில் இயங்கும் மிகப்பெரிய நிறுவனத்திற்கு தண்ணீர் தேவையான அளவு கிடைக்கும் போது, ஏழை மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் அரசு மருத்துவமனையில் இல்லாதது வேதனைக்குரிய விஷயமே. இந்த பிரச்னையில் அரசு தீவிர கவனம் செலுத்தி தீர்வுகாண வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.