பருவமழை பொய்த்ததால் சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில், நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டதால் சென்னை மக்கள் லாரி தண்ணீரை நம்பியே உள்ளனர். சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு 800 ரூபாய்க்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்கிறார்கள். அதே சமயம் தனியாரிடம் வாங்கினால் இரண்டாயிரம் முதல் ஆறாயிரம் வரை செலவாகும்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு நான்கு முதல் எட்டு நாட்களுக்குள் மெட்ரோ வாட்டர் லாரி வீடு தேடி வந்துவிடும் எனக் கூறப்பட்டாலும், தமிழகத்தில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் தண்ணீருக்கு இருபது முதல் நாற்பது நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மெட்ரோ நிர்வாகம் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் வழங்காமல், முக்கியஸ்தர்களின் வீடுகள், அரசியல் பிரமுகர்களின் வீடுகளுக்கு உடனுக்குடன் டேங்கர் லாரிகளை அனுப்பி வைப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் அலுவலகத்திற்கு நேரில் சென்று ரசீது இல்லாமல் இரண்டாயிரம் கட்டினால் மறுநாளே லாரி வந்து விடுகிறதாம். ரசீது இல்லாமல் வசூல் செய்யும் பணம் யாருக்குச் செல்கிறது என்ற விபரம் தெரியவில்லை. ஆன்லைனில் பதிவு செய்த மக்கள் இந்த மோசடிகளைக் கண்டு, முன்னுரிமைப் பட்டியலையும், குடிநீர் வழங்கிய விபரங்களையும் வெளிப்படையாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், டேங்கருக்கு 2,000, ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் வருமானம், வி.ஐ.பி-கள்-அரசியல்வாதிகள் நட்பு என்று வேறு ரூட்டில் கணக்குப் போட்டு, மெட்ரோ வாட்டர் ஆன்லைன் பதிவுப் பட்டியலை கண்டும் காணாமல் இருக்கிறது நிர்வாகம் .