அரசு பள்ளிகளை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வலியுறுத்தியும், அரசு பள்ளிகளை யார் வேண்டுமானாலும் தத்தெடுத்துக் கொள்ளலாம் என்கின்ற தமிழக அரசின் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தனியார் பள்ளிகளில் முழுமையாக அமுல் படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்ட உதவிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே வழங்கிட வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். அதேபோல் கோவை, தஞ்சை மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியார்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, " தமிழகத்தில் செயல்படக்கூடிய தனியார் பள்ளிகளில் அதிகப்படியான கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ச்சியான புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதோடு மட்டுமில்லாது கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் பணம் வசூலிக்க பட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன. அந்த புகார் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம். மேற்கண்ட கோரிக்கைகளை மாணவர் நலன் சார்ந்து நிறைவேற்றிட வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.” என அவர் தெரிவித்தார்