தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சமையல் பணிக்கு நியமிக்கும் போது உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி வருகிறது.
தலித் மற்றும் ஆதிதிராவிட சமுகத்தைச் சேர்ந்த பெண்கள் சமைத்த உணவை சாப்பிட மாட்டோம் என கூறுவதும், அப்பணியாளர்களை ஆதிக்கத்தில் உள்ளவர்கள் இழிவுபடுத்துவதும் அரங்கேறி வருகிறது.
ஆனால் இதுபோன்ற ஒடுக்குமுறைகளை ஒழிக்கவேண்டிய தமிழக அரசும் அதன் கீழுள்ள நிர்வாகங்களும் உயர் சாதியினருக்கு ஆதரவான நிலையையே கடைபிடித்து வருகிறது.
அவ்வகையில், மதுரை வலையாப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அண்ணலட்சுமி என்ற பெண், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, அவர் சமைத்த உணவை மாணவர்கள் உண்ண மாட்டார்கள் எனக்கூறி உயர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் ஒரே நாளில் மாவட்ட நிர்வாகமும் அப்பெண் ஊழியரை பணியிட மாற்றம் செய்துள்ளது. அதேப்போல், மதிப்பனூர் என்ற கிராமத்திலும் ஜோதிலட்சுமி என்ற தலித் பெண் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.