கேரளாவில் கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் அம்மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவரை வெப்பச்சலனத்தினாலேயே மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், தமிழக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான தேனி, கோவை, நீலகிரி, நெல்லை, குமரி என 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் ஆகிய பகுதிகளில் அனல் காற்று வீசும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸில் இருந்து 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.