தமிழகத்தில் உள்ள கோவை, தருமபுரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அந்த திட்டத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்ட பா.ஜ.க அரசு தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கான பணியில் மத்திய அரசின் பவர் க்ரீட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து அறிந்த விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் மின்கோபுரம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், உயர் மின் அழுத்தத்தால் தங்களுக்கும் தங்களது விளை நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கருமத்தம்பட்டி, செம்மாண்டப்பாளையம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் பவர் க்ரீட் நிறுவனம் போலீசாரின் துணையுடன் நில அளவீடு பணியை தொடங்கியது.
இதனை எதிர்த்த அப்பகுதி மக்களும், விவசாயிகளும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகே உள்ள மின் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினர். போலீசாரின் சமரச பேச்சுக்கு ஒத்துழைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.