முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 28 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழக அரசும் இது தொடர்பான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஏழு பேரின் விடுதலை தற்போது ஆளுநரின் ஒற்றைக் கையொப்பத்தில் வந்து நிற்கிறது.
ஏழு பேரின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடிவருகிறார். கட்சிகளுடன் இணைந்து போராட்டம், மக்களிடம் ஆதரவு கேட்டு சுற்றுப்பயணம் போன்ற பல வழிகளில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வருகிறார். ஏழு பேரின் விடுதலையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை தொடர்ந்து, சளைக்காமல் முன்னெடுத்து வருகிறார் அற்புதம்மாள்.
இந்நிலையில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் ஆகிறது. அற்புதம்மாள் தனது மனக்குமுறலை ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "காலைல அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு. வெளியே நானும்,உள்ளே அவனும் போராடி மருகி செத்துபோகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும்.
161ல் அறிவு தந்த மனுமீது உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவ மதிக்காம குப்பையா நினைக்கிறவங்கதான், தீர்ப்பு தந்த நீதிபதி, வாக்குமூலம் பதிஞ்ச அதிகாரி உண்மைய சொன்னபிறகும் அறிவை குற்றவாளின்னு சொன்ன தீர்ப்ப மட்டும் மதிக்கனும்னு கூக்குரலிடறாங்க. உண்மை குற்றவாளிய கண்டறிய போராடாம மறைந்தவர் பெயரால அருவெறுப்பான அரசியல் செய்யறாங்க. விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல் சலிப்பை தருது. 28 ஆண்டுல சட்டத்தின் ஆட்சி என்னன்றத நல்லா பாத்துட்டேன்.சட்டம், நீதிங்கரது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே உள்ள வசதியா நீடிக்கனுமா?" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.