தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் காவல்துறையினர் ஆங்காங்கே இடையூறு செய்வது தொடர்பாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா.
இதுகுறித்துப் பேசிய அவர் “24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யலாம் என்று தமிழக அரசு அரசாணை ஒன்றினை வெளியிட்டது. அதன்படி இரவு நேரங்களிலும் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளைத் திறந்து வைத்து தங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் இரவு நேரங்களில் கடைகளை அடைக்கும்படி வற்புறுத்துவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார் விக்கிரமராஜா.
மேலும், கடைகளைத் திறப்பதற்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று விரைவில் முதலமைச்சரைச் சந்தித்து மனு ஒன்றினை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் விக்கிரமராஜா. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.