சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் வகையில் 2017ம் ஆண்டு ஜூலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.-யாக பொன் மாணிக்கவேலை நியமித்து, அவருக்கு தேவையான காவலர்கள், உட்கட்டமைப்பு, வாகன வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார். பின்னர் சிலை கடத்தல் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு அந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்த நிலையில், 2018 நவம்பர் 30-ஆம் தேதி பொன்.மாணிக்கவேல் ஓய்வுபெற்றதையடுத்து, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான வசதிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை என பொன்.மாணிக்கவேல் மனுத்தாக்கல் செய்துள்ளார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கான மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவில், உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், எஸ்.பி. பதவி உருவாக்கப் பட்டுள்ளதாகவும், தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை எஸ்.பி -யாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்வரியிடமும், கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கிடமும் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு அமைச்சரும், டி.ஜி.பி-யும் விசாரணையில் தலையிடுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன், குறிப்பிட்ட 4 வழக்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டி.ஜி.பி ஆர்வம் காட்டுகிறார். இந்த வழக்குகளில் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பல மாவட்டங்களின் வழக்குகள் மாற்றப்படவில்லை என்றும், இதுதொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதில், 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதை மனுவில் பொன்மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர 3 லட்சம் சிலைகள் தொடர்பான ஆய்வுகள் செய்ய வேண்டிய நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்குக்கான வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும்; தற்போதைய குழுவில் 21 பெண் காவலர்கள் பணியில் இருந்தும், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படாததால் அவதிப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருச்சி சிறப்பு முகாமிற்கு அலுவலகத்திற்கு துப்புரவு பணிக்கு கூட நிதி ஒதுக்குவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறப்பு பிரிவு தேவைப்படும் 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுக்கான வாகன வசதி, உட்கட்டமைப்பு வசதி என எதுவும் செய்து கொடுக்காமல், தொடர்ந்து அவமதிப்பில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார். ஐ.ஜி.-யாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு பொறுப்பேற்றது முதல், தான் சிறப்பாக பணியாற்றுவதை தடுக்கவே, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றாமல் தொடர்ந்து அவமதித்து வருவதால், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.