நீட் தேர்வு ஆண்டுதோறும் தமிழக மாணவர்களின் உயிரைக் குடித்து வருகிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்புக் கனவு நீட் தேர்வால் கரைந்து போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்காமல் விடாப்பிடியாக இருந்து வருகின்றன மத்திய-மாநில அரசுகள்.
இந்நிலையில், நீட் தேர்வில் போராடி வென்ற ஏழை, எளிய பிள்ளைகளைப் பற்றிய செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அப்படி ஒன்றுதான் ‘நீட் தேர்வில் வென்ற தையல் தொழிலாளியின் மகள்’ எனும் செய்தி. மக்களும் இதன் உட்கருத்தை அறியாமல் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இச்செய்தி மேலோட்டமாக எளிய மக்களின் சாதனையைப் போற்றும் விதமாகத் தெரிந்தாலும், இதை பரப்புவோரின் உள்நோக்கம், ‘நீட் தேர்வு எளிமையானது’ என நிறுவுவது தான்.
இந்தாண்டு நீட் தேர்வில் வென்ற அந்த தையல் தொழிலாளியின் மகள் ப்ளஸ்-2 தேர்வை 2017-ம் ஆண்டில் எழுதினார். ப்ளஸ்-2 தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண்கள் 1161. நீட் தேர்வு இல்லையென்றால் இந்த மதிப்பெண்களுக்கு அவர் தமிழகத்தின் ஏதோவொரு மருத்துவக் கல்லூரியில் நிச்சயம் சீட் பெற்றிருப்பார்.
ஆனால், அந்த உரிமையைப் பறித்திருக்கும் அரசு அவரை நீட் தேர்வை எழுதப் பணிக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் கடன் வாங்கி நீட் சிறப்பு வகுப்புகளில் கற்றாலும் கடந்த ஆண்டு நீட் தேர்வில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அதன்பின்னரும் நீட் தேர்வுக்கு கடுமையாகப் படிக்கத் தொடங்கியிருக்கிறார் ஜீவிதா.
இந்த ஆண்டு நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்று வென்றிருக்கிறார் ஜீவிதா. ஒரு ஏழைத்தொழிலாளியின் மகள் இரண்டாண்டு காலத்தையும், 2 லட்சம் பணத்தையும் நீட் சிறப்பு வகுப்புகளுக்காகவே செலவிடுவது ஒன்றும் சாதாரண காரியமல்ல. உளவியல் மற்றும் பொருளாதார ரீதியாக குடும்பச் சூழலையும், சமூகச் சூழலையும் எதிர்கொண்டு ஈராண்டு காலத்தை படிப்பதற்காகவே ஒதுக்கி இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜீவிதா. ஆனால், இதைக் காட்டி நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவதற்கு வலுச்சேர்க்கும் வேலைகள் நடைபெறுகின்றன.
நீட் தேர்வு தற்கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக்கும் தருணத்தில், ஜீவிதாவின் வெற்றியை எளிதானதாகக் கருதிவிட முடியாது. இது போராடிப் பெற்ற வெற்றி. ஆனால், ஏழைப் பிள்ளைகள் எல்லோராலும் ஆண்டுக்கணக்கில் செலவிட்டு நீட் தேர்வுக்கு படிக்கும் சூழல் வாய்க்காது என்பதும் நினைவிருக்கவேண்டும்.