தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகள் உதயகீர்த்திகா. அல்லிநகரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்ற அவர், போலந்து நாட்டில் நடைபெறும் விண்வெளி பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் ஈர்க்கப்பட்டு, இவருக்கு விஞ்ஞானி ஆகும் ஆசை வந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும், உக்ரைனில் உள்ள கார்கியூ நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் 4 ஆண்டு ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் படிப்பில் சேர்ந்துள்ளார். அங்கும் சிறப்பாக படித்து 90 சதவிகிததற்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதையடுத்து, கீர்த்திகாவுக்கு போலந்து நாட்டின் அனலாக் விண்வெளி பயிற்சி மையத்தில், ஜெர்மனி,நெதர்லாந்து நாட்டின் விண்வெளி வீரர்களுடன் சேர்ந்து பயிற்சிபெறவும், அவர்களுடன் விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் 20 மாணவர்கள் இந்தப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பேசிய கீர்த்திகா, “ இதுவரை இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இரண்டு பெண்கள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அமெரிக்காவின் நாசாவில் இருந்துதான் சென்றனர். நானும் அவர்களைப் போல் விண்வெளிக்குச் செல்ல வேண்டும். ஆனால், எனக்கு இந்தியாவின் இஸ்ரோ தளத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் என் லட்சியம். 2021ம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதில் ஒருவராக நானும் இருக்க வேண்டும் என்பதே என் இலக்கு" என்று கூறியுள்ளார்.
விண்வெளி பயிற்சியில் கலந்துகொள்ள தேர்வாகியிருக்கும் உதயகீர்த்திகாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.