முத்தமிழறிஞர் கலைஞரின் தொண்ணூற்றி ஆறாவது பிறந்ததினத்தையொட்டி முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் சிறப்புகளை நினைவுகூர்ந்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க தொண்டர்களும், கலைஞர் செயல்படுத்திய சமூக நீதித் திட்டங்களால் பயன்பெற்றோரும், அவற்றின் அவசியத்தை உணர்ந்தோரும் சமூக வலைதளங்களில் கலைஞரின் புகழ்பாடி வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலைஞரின் பிறந்ததினத்தை நினைவுகூர்ந்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “புகழ்மிக்க தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கலைஞர். அவரது நினைவுகள் ஒருபோதும் மறையாது. அவரது பிறந்ததினத்தில் அவரை நினைவுகூர்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞரின் 96-வது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தும்போது என் மனதிலே தோன்றும் எண்ணம் “போராட்டங்கள் எப்போதும் ஓய்வதில்லை”. இடையறாக் காவலே விடுதலைக்காக நாம் அளிக்கும் விலை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, “முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரை அவரது பிறந்ததினத்தில் அன்போடு நினைவுகொள்கிறேன். அவர் எல்லோராலும் விரும்பப்பட்ட அரசியலாளர்; பெரும் தலைவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.