முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கும், மெரினா கலைஞர் நினைவிடத்திலும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் 37 மக்களவைத் தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 13 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்ததற்காக தமிழக மக்களுக்கும், தலைவர் கலைஞருக்கும் நன்றி பாராட்டும் விதமாக சென்னை நந்தனத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்துவரும் இக்கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், கே.எஸ் அழகிரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உரையாற்றி வருகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘கலைஞர் கடைசி மனிதனின் வலியையும் உணர்ந்தவர். அதை அவர் கொண்டு வந்த திட்டங்களான கை ரிக்ஷா ஒழிப்புத் திட்டம், சமத்துவபுரம், கண்ணொளித் திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டங்களின் மூலம் உணர முடியும்.
மனிதாபிமானம் மட்டுமல்ல; தொலைநோக்குப் பார்வையும் கொண்டவர் தலைவர் கலைஞர். அதனால்தான் மாநில உரிமைகளைக் காப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்தித் திணிப்பை எதிர்த்தார், சமூக நீதியை நிலைநாட்டினார். நாட்டில் இதுவரை எத்தனையோ முதல்வர்கள் இருந்திருக்கலாம் ஆனால், உண்மையில் அந்த பதவிக்கான இலக்கணத்தை வகுத்தவர் கலைஞர்.
கலைஞரின் வழி அரசியலைக் கற்றவர் கலைஞர். அந்த ராஜதந்திரத்தை நிரூபித்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின். இந்தியா முழுவதும் சனாதனத்தை பரப்பி வரும் கூட்டத்தை எதிர்க்க, கலைஞரின் கொள்கையான ‘மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாச்சி’ என்கிற தத்துவத்தைக் கொண்டு முறியடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பெரியாரின் கொள்கைக்குப் பாதுகாப்பாக இருந்த கடைசித் தூண் விழுந்துவிட்டது என கனவு கொண்டிருந்தவர்கள் எண்ணத்தில் மண் விழ, கழகத்தைக் காப்பாற்றும் ஆற்றல்வாய்ந்த தலைமையாக எழுந்து நின்றார் தலைவர் மு.க.ஸ்டாலின்.” எனப் பேசினார் திருமாவளவன்.