மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தருமபுரியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தி மொழி தெரியாத மக்களிடம் கருத்த எதுவும் கேட்காமல் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு.
தமிழகம் இந்தி திணிப்பை எதிர்த்து வலுவான போராட்டம் நடத்தி வரலாற்றில் முன்னுதாரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் நடத்திய தமிழகம் மீண்டும் இந்தி திணிப்பை எதிர்த்து போராடும். அந்தச் சூழல் உருவாகாமல் மத்திய அரசு பார்த்துக்கொள்வண்டும்” என்று கூறினார்.
மேலும், “மத்தியில் மோடி ஆட்சி பொறுப்பேற்று பதவி பிரமாணம் செய்வதற்குள் வடமாநிலங்களில் சிறுபான்மையினர் தலித் மக்களின் தாக்குதல் என்பது அதிகரித்துள்ளது. அனைவருக்குமான ஆட்சியாக இருக்கும் என மோடி தெரிவித்தார்; ஆனால் அது உண்மையல்ல என சமீபத்திய நிகழ்வுகள் வெளிக்காட்டியுள்ளது.
தேர்தல் முடியும்வரை எட்டு வழிச்சாலை பற்றி பேசாமல் இருந்துவிட்டு தற்போது மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு அ.தி.மு.க மெளனம் காக்கிறது. பா.ம.க கூட்டணியில் இருப்பதால் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது.
எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட விசாயிகளை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். வருகிற 4-ம் தேதி திருவண்ணாமலையில் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து விவசாயிகளைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.