நாடுமுழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீஸ் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் 72 மையங்களில் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
முதல்நிலைத் தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை இரண்டாம் தாளும் என இருபிரிவுகளாக தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வுகளில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
தேர்வில் இன்று கொடுக்கப்பட்ட பொது அறிவுப் பகுதி வினாத்தாள்களில் பெரியார் பெயரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அவரது சாதியை அடையாளப் படுத்தும் நோக்கத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வின் பொது அறிவு தாளின் 36-வது வினாவில் 3 கூற்றுகளைக் குறிப்பிட்டு சரியானதைத் தேர்வு செய்வது போல உள்ளது. அதில் மூன்றாவது கூற்றில் சுயமரியாதை இயக்கம் எனக் குறிப்பிட்டு அதற்கு நேரெதிரே ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்வு வினாத்தாளில் பெரியார் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பெரியாரின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு டி.என்.பி.எஸ்.சி சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு, இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து தற்போது மீண்டும் அதே போன்ற தவறை யு.பி.எஸ்.சி தேர்வுக்குழு செய்துள்ளது. தனது வாழ்வில் பெரும்பகுதியை சாதி ஒழிப்புப் போராட்டங்களுக்குச் செலவிட்ட பெரியாரின் பெயரை சாதியோடு குறிப்பிட்டு அவமதித்துள்ளனர். இந்தச் செயலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.