மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவுகளில், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "மத்திய பா.ஜ.க அரசு பதவி ஏற்ற உடனேயே புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதன் மீது 30 நாட்களுக்குள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. கல்வியை காவிமயமாக்குவது, வணிக மயமாக்குவது, கல்வியை மாநில உரிமைகளை மொத்தமாக கபளீகரம் செய்வது என்பதை நோக்கமாகக் கொண்டு பா.ஜ.க-வின் முந்தைய அரசுகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.
இந்தப்பின்னணியில், புதிய வரைவுக்கொள்கை மக்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இதுவரையிலும் இருமொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தமிழகத்தில் தற்போது மும்மொழித்திட்டத்தை அமலாக்குவதன் மூலம் இந்தியை திணிப்பதற்கான முயற்சி இது என்பது தெளிவாகிறது.
இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் எதிர்காலத்தில் இந்தியா சந்திக்கும் நவீன சவால்களை ஈடுகொடுக்கும் வகையில் ஏற்புடையதாக கல்விக்கொள்கை அமைய வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் இதன் மீது 30 நாட்களுக்குள் கருத்து தெரிவிப்பது சாத்தியமற்றது.” எனத் தெரிவித்துள்ளார்.