ரேசன் அரிசியை தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக கடத்திச்சென்ற போது, காரிலேயே துரத்திச்சென்று திருவள்ளூர் அருகே தமிழக போலீசார் இருவர் மடக்கி பிடித்த சம்பவம், சினிமாவில் வருவது போன்று அரங்கேறியுள்ளது.
நியாய விலை கடைகளில் விற்கப்படும் விலையில்லா அரிசிகளை கடத்தி ஆந்திர மாநிலத்தில் விற்பதற்காக திட்டம் தீட்டப்பட்டது குறித்து சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, நேற்று (மே 28) இரவு ஆர்.கே. பேட்டை அருகே அத்துறையைச் சேர்ந்த முத்தமிழ் செல்வம் மற்றும் முத்து மாணிக்கம் ஆகிய போலீசார், காத்திருந்தனர். சுமார் 9.30 மணியளவில், கடத்தல் அரிசியை கொண்டுச் செல்லும் டாடா சுமோ கார் செல்வதை கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சேஸ் செய்து அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது லிங்கநாதன் என்ற டிரைவர் தப்பியோடியதால் காரை மற்றும் காரில் இருந்த 1000 கிலோ அரிசியை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய போலீசார், ஆந்திராவில் இருமடங்கு விலைக்கு விற்பதற்காக தமிழகத்தில் இருந்து அரிசிகளை கடத்திச் சென்றுள்ளனர். இதுபோன்று ஏராளமான கடத்தல் சம்பவங்களை தடுத்திருந்தாலும், முதல் முறையாக இப்போதுதான் சேஸிங் செய்ததை வீடியோ எடுத்து வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.