பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையை அறிக்கையாக தாக்கல் செய்த நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் முதலில் இருந்து விசாரணையை தொடங்கினர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தற்போது குற்றப்பத்திரிக்கையை திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐவருக்கு எதிராக கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் என்ற அடைப்படையில் இந்த வழக்கானது பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும், அவ்வாறு நடந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வீடியோவை எடுத்து, பெண்ணை மிரட்டி, பணம் பறிப்பது போன்ற பல்வேறு விஷயங்கள் நடந்திருப்பதாகவும் மே 24ம் தேதி முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஒரு வழக்கில் குற்றம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே தற்போது முதல் கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ கூறியிருப்பதாவது : 5 பேரும் திட்டமிட்டு கூட்டு சதியில் ஈடுபட்டிருப்பது எங்களின் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம், வன்கொடுமை செய்துள்ள்ளனர்.
இவர்களிடம் மாட்டிய பெண்களை ஒருவர் பாலியல் வல்லுறவு ஈடுபடும்போது மற்றவர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதுபற்றி பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ, போலீசில் புகார் செய்யக்கூடாது என்று அந்த பெண்களை எச்சரித்துள்ளனர். தாங்கள் எடுத்த ஆபாச படங்களை காட்டியும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அந்த இளம்பெண்களை மிரட்டியுள்ளனர்.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுப்பதற்கு முன்பும், அந்த குற்றம் நடந்த பின்னரும் ஒருவருக்கொருவர் செல்போனில் தொடர்பு கொண்டபடி இருந்துள்ளனர். இந்த வழக்குக்கு தேைவயான அனைத்து தகவல்களையும், ஆவணங்களையும் சேகரித்து குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளோம். இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் கூறினர்.
அடுத்தகட்ட விசாரணைகள் நிறைவு பெற்றதும் அடுத்தக்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.