தமிழ்நாடு

எம்.பி. ஆன நிலையில் 14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா : ஹெச்.வசந்தகுமார் அறிவிப்பு!

சட்டமன்ற உறுப்பினராக இருந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றதால் , 14 நாட்களுக்குள் சட்டரீதியாக ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார் ஹெச்.வசந்தகுமார்.

எம்.பி. ஆன நிலையில் 14 நாட்களுக்குள் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா : ஹெச்.வசந்தகுமார் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற ஹெச்.வசந்தகுமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“கன்னியாகுமரி மாவட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது. கல்வி அறிவு அதிகமாக உள்ள மாவட்டம் என்ற பெயர் பெற்ற மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். மாவட்டத்தில் நான்கு மையங்கள் அமைக்கப்பட்டு இளைஞர்களின் சுய விவரம் பெறப்பட்டு அதன் மூலம் அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் சார்ந்த தொழில்கள் மற்றும் வேலைகளை உள்ளது. அதிலும் தேவையான முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரப் போகிறேன். தண்ணீர் அதிகமாக உள்ள இடங்கள் என்பதால் விவசாயிகளுக்கும் உதவும் வண்ணம் தேவையான திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார். மேலும், தான் உறுதியளித்த அனைத்து திட்டங்களும் இன்னும் ஒரு வருடத்திற்குள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

காங்கிரஸால் நாடாளுமன்றத்தில் வலுவான குரலை எழுப்பமுடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “மெஜாரிட்டி இருந்தால்தான் பாராளுமன்றத்தில் செயல்பட முடியும் என்று இல்லை. நாங்கள் மக்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டே தான் இருப்போம். மக்களின் குறைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. நிறைவேற்றவில்லை என்றால் நிச்சயம் தட்டிக் கேட்பேன்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் நாடாளுமன்ற உறுப்பினராக ஆன நிலையில் , 14 நாட்களுக்குள் சட்டரீதியாக ராஜினாமா செய்வேன்.

கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி அமைத்தார். பா.ஜ.க-வை எதிர்ப்பது மட்டும் எங்கள் நோக்கம் அல்ல. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்” என்றும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories