தமிழகத்தில் உள்ள கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள் (LED), தரை இணைப்பு (Earth Wire) அமைப்பதில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சராக உள்ள எஸ்.பி.வேலுமணி ஊழல் செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழலின் அளவு சுமார் ரூ.1,811 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து, ஊழல் செய்தவர்களை பதிவியில் இருந்து நீக்கி சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க முன்னாள் எம்.எல் அப்பாவு.
அவரது அந்த கடிதத்தில் "கிராம ஊராட்சிகளில் எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்பட்டதிலும், மின் கம்பங்களில் தரை இணைப்பு அமைக்கப்பட்டதிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 20w எல்.இ.டி விளக்கை மின்கம்பத்தில் அமைப்பதற்கு 674 ரூபாய் செலவாகிறது என வேலூர் மாவட்டம் வாலாஜா ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரிவித்துள்ளார். ஆனால், பிற பகுதிகளில் அதே 20w விளக்குகள் அமைக்க 4,151 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு நிதியில் 566 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதே போல் 90W எல்.இ.டி விளக்குகள் அமைப்பதில் 127 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ” என்று விரிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதே போல், ”மின் கம்பங்களில் தரை இணைப்புகள் அமைக்க 210 ரூபாய் வீதம் செலவாகும். ஆனால், 750 ரூபாய் செலவு என பில் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 118 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.
இந்த பணிகளுக்கான நிதி ஊராட்சிகளில் உள்ள 3 மற்றும் 9-ம் எண் வங்கிக் கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கில் உள்ள நிதி, மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை திட்டப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஆனால், அதை எல்.இ.டி மின்விளக்குகள் வாங்குவதாக கூறி கொள்ளையடித்துள்ளனர்.” என்றும் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார் அப்பாவு.
”கிராம ஊராட்சிகளில் எல்.இ.டி விளக்கு மற்றும் மின் கம்பங்களில் தரை இணைப்பு கொடுக்கும் பணிகளில் 811 கோடி ரூபாய் ஊழல் நடதுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இதே பணிகளில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. மொத்தம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அரசு அதிகாரிகள் சேர்ந்து 1,811 கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளனர்.” என்று அப்பாவு தனது புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எஸ்.பி.வேலுமணியின் ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யம் குறித்து தேர்தல் பிரசாரங்களின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். “எஸ்.பி.வேலுமணி ஒரு ஊழல் பேர்வழி” எனவும் சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.