தமிழகத்தில் கடந்த ஏப்.,18ம் தேதி 38 தொகுதிகளுக்கான நாடாமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி பகுதியில் வாக்குப்பதிவு நாளன்று சாதி ரீதியாக தலித் மக்கள் மீதும் அவர்களின் இருப்பிடம் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவினரும், இந்து முன்னணியினரும் கூட்டு சேர்ந்து வன்முறையை கட்டவிழ்த்துள்ளதால் 275 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொலை வெறி தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியிகள் கண்டனம் தெரிவித்தும், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், வன்முறையால் 275 வாக்காளர்கள் வாக்களிக்காததால் பொன்பரப்பி வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என விஷ்ணுராஜ் என்பவர் கடந்த வாரம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அவரது கோரிக்கை தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
மறுவாக்குப்பதிவு குறித்த இந்த முறையீட்டை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் வழக்கு மூலமாக அணுக மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.