ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் மக்கள் நடத்திய அமைதிப்போராட்டத்தை, வன்முறையாக சித்தரித்து தமிழக அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியாகினர்.
கடந்த ஆண்டு மே 22ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்திய அதே நேரம், ஆளும் அடிமை அ.தி.மு.க அரசு மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாளை இந்த துன்பச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் உறுதியேற்பு கடிதம் ஒன்றைத் எழுதியுள்ளார்.
அதில், “சுற்றுப்புறச்சூழலுக்கும் மக்களின் உயிர்வாழ்வுக்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தைச் சகியாமல், போராடியவர்கள் மீது அ.தி.மு.க அரசு ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டை மறக்கவே முடியாத மே 22ஆம் தேதி தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்.
மாணவி உள்ளிட்ட 13 அப்பாவிகளின் உயிரைப் பறித்த அந்தக் கொடூர துப்பாக்கிச் சூட்டினை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி சட்டமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் ஆதரித்துப் பேசிய மனிதாபிமானமற்ற செயலையும் மறக்க முடியாத நாள். இந்தத் துப்பாக்கிச் சூடு, தூத்துக்குடி மக்களை மட்டுமல்ல தமிழக மக்களை, ஏன் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை மிகுந்த அதிர்ச்சியில் உறைய வைத்த நாள் என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.
100 நாட்களுக்கு மேல் அமைதியாகப் போராடிய மக்கள் மீது அராஜகத்தை ஏவிவிட்டு அந்தப் பகுதியையே ரணகளமாக்கியது அதிமுக அரசு. ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள போராட்டங்களையும் அமைதியான பேரணிகளையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று நினைத்த அ.தி.மு.க அரசை எதிர்த்து எரிமலை போல் எழுந்த கொந்தளிப்பைத் தமிழகம் கண்டது. ஸ்டெர்லைட் ஆலையை கொள்கை முடிவு எடுத்து நிரந்தரமாக மூட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தினாலும், வஞ்சக எண்ணத்துடன் அ.தி.மு.க அரசு அதை ஏற்கவில்லை. துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு விடுத்த கோரிக்கையையும் ஒப்புக்கொள்ளவில்லை.
மக்களின் கடுமையான போராட்டத்தைக் கண்டு எங்கும் இயல்பாகக் கிளம்பிய ஆவேசமான எதிர்ப்பினைச் சமாளிக்கமுடியாமல் இறுதியில், ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்து, இன்று வரை அந்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கையும் பெறப்படவில்லை. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு ஓர் ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இன்னும் அவர்களுக்கு உரிய நீதியும் கிடைக்கவில்லை.
தற்போது இந்தத் துப்பாக்கிச் சூட்டையும், நடைபெற்ற அராஜகத்தையும் கண்டித்து கூட்டம் போடவும், உயிரிழந்த 13 பேருக்கு ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சி கூட நடத்தவும் விடாமல் அ.தி.மு.க அரசு இரக்கம் இல்லாமல் ஆணவ எண்ணத்துடன் தடை போட்டு இருக்கிறது. ஒருபக்கம் "நினைவேந்தல் நிகழ்ச்சிக்குத் தடை" இன்னொரு பக்கம் "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க மறுப்பு" என்று எப்போதும் போல இரட்டை வேடத்தைப் போட்டு கபட நாடகத்தை மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி தலைமையிலான அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த ஏமாற்று நாடகத்தை தூத்துக்குடி மக்களும் தமிழக மக்களும் நீண்ட நாள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவோ பொறுத்துக் கொள்ளவோ மாட்டார்கள். ஆகவே மனிதநேயமற்ற முறையில், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நசுக்கும் வகையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் அ.தி.மு.க அரசு பிற்போக்குத் தனமாக நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.
அப்பாவிகளின் 13 உயிர்கள் அ.தி.மு.க ஆட்சியில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி துயரம் நிறைந்த அந்த குடும்பங்களுக்கும், போலீஸ் தடியடிக்கும் அ.தி.மு.க அரசின் அடாவடி அராஜகத்திற்கும் ஆளான தூத்துக்குடி மக்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் கழக அரசு அமைந்ததும் காட்டுமிராண்டித் தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீதும், அந்தத் துப்பாக்கி சூட்டிற்கு வன்மத்தோடு ஆணையிட்ட வர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதே நேரத்தில், மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்துக் கசக்கிய அ.தி.மு.க ஆட்சியின் கொடூரமான துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் உரிய நீதி விரைந்து கிடைக்கவும், அமைச்சரவையைக் கூட்டி ஒரு கொள்கை முடிவினை எடுத்து நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் கழக ஆட்சி அமைந்தவுடன் முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்படும் என்று இந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் உறுதி அளிக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.