ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழக ஆளுநருக்கு ஒருலட்சம் தபால் அனுப்பும் நிகழ்ச்சி தாம்பரம் அஞ்சலகத்தில் நடைபெற்றது. அதை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் துவக்கிவைத்தார், உடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் அஞ்சல் அனுப்பினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை அழுத்தம் கொடுக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். ஆளுநர் பெரும்பான்மையான மக்களின் என்னப்படி விடுதலை செய்யவேண்டும் என்றார். மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்வேன் என கூறினார், ஆனால் அவர் பெயரை சொல்லி ஆட்சி நடத்துபவர்கள் ஏன் விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்கவில்லை என்றார். ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் செய்த நிலையில் மீண்டு ஒருமுறை கடிதம் எழுதுகிறோம். இதுவே கடைசியாக அமைந்தால் மகிழ்ச்சி என்றார்.