கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்திலிருந்து கேரளா செல்லக்கூடிய ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளை தேர்ந்தெடுத்து பயணிகளிடம் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சேர்ந்த சாகுல் அமீது கைது செய்யப்பட்டு உள்ளான்.
இவன் கடந்த நான்கு வருடங்களாக ரயில் கொள்ளையில் ஈடுபட்டு, மலேசியாவில் ஹோட்டல்களை கட்டி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. ரயில் கொள்ளையில் சம்பாதித்த பணத்தை வைத்து உலக நாடுகள் முழுவதும் சுற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு முதல் ரயிலில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்து இரவு நேரங்களில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறான். குறிப்பாக பெண்களிடம் அதிகமாக நகைகள் கொள்ளையடித்துள்ளான். பயணிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு தூங்கும் போது கொள்ளை அடித்து விடுவான். அதன் பிறகு கொள்ளை அடித்த பணத்தை வைத்து வெளிநாடு சுற்றுலா சென்று வந்துள்ளான்.
இதுவரை 110 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரெயில்வே டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், வங்கி கணக்கு மற்றும் வெளிநாடு ஓட்டலையும் முடக்க ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளதாக பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இது தவிர ரயில் கொள்ளையை தடுக்க தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.