தமிழ்நாடு

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை !

தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் தடை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

TET எனப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள் மீது, பணி நீக்க நடவடிக்கை எடுக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி உள்பட 4 ஆசிரியைகள், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாத தங்களை பணி நீக்கம் செய்ய கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடந்த ஏப்ரல் 30-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்று ஆசிரியர் பணிக்காக சுமார் 60 ஆயிரம் பேர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், மனுதாரர்கள் வாய்ப்புகள் கிடைத்தும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் உள்ளனர். எனவே, தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெறாமல், ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். ‘தகுதி தேர்வு அறிமுகப்படுத்தி 9 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு தகுதி தேர்வு நடத்தப்படவில்லை. மற்ற மாநிலங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில் தேசிய அளவில் ஆண்டுக்கு இரு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டாலும், அந்த தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்துக் கொள்ளமுடியாது. இதை புரிந்துக் கொள்ளாமல், தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு ரத்து செய்யவேண்டும். இடைக்கால தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன்,கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் வருகிற ஜூன் மாதம் நடைபெறக்கூடிய தகுதித் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் , அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை ஜூன் இரண்டாவது வாரம் ஒத்தி வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories