தமிழ்நாடு

விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி மோசடி: கரும்பு ஆலை நிர்வாகத்தின் தில்லுமுல்லு அம்பலம்!

விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.360 கோடி கடன் பெற்று கரும்பு ஆலை நிர்வாகம் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி மோசடி: கரும்பு ஆலை நிர்வாகத்தின் தில்லுமுல்லு அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய பாக்கி ரூ.1854 கோடி நிலுவையில் இருக்கிறது; இதைப் பெற்றுத்தர எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் மாநில அரசு அலட்சியம் காட்டுவதால் விவசாயிகள் கடும் துயரத்தில் சிக்கியுள்ளனர் என தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.1854 கோடி கரும்பு பண பாக்கி தர வேண்டியுள்ளது. விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்பும் மாநில அரசு கரும்பு பண பாக்கியை பெற்றுத்தரவில்லை.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அம்பிகா, ஆரூரான் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆரூரான் சர்க்கரை ஆலை ஆகிய மூன்று ஆலைகள் 2016-17ல் அரவை செய்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலை எப்.ஆர்.பி-ஐ இரண்டு ஆண்டுகளாக தரவில்லை. ரூ.82 கோடி பாக்கி வைத்துள்ளனர். விவசாயிகள் பல போராட்டங்களை நடத்திய பின்பும் மூன்று ஆலைகளையும் மூடிவிட்டு ஆலை முதலாளி விவசாயிகளுக்கு பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார்.

விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி மோசடி: கரும்பு ஆலை நிர்வாகத்தின் தில்லுமுல்லு அம்பலம்!

இந்நிலையில் விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் நட வடிக்கை எடுத்து அம்பிகா ஆரூரான் உரிமையாளர் தியாகராஜன் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளதை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது. அதே நேரத்தில் விவசாயிகளின் பாக்கித் தொகையை வட்டியுடன் பெற்றுத்தர வேண்டுகிறோம்.

2013-14 முதல் 2016-17 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மாநில அரசு கரும்பு பரிந்துரை விலை அறிவித்ததை 24 தனியார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. 24 தனியார் ஆலைகள் ரூ.1217 கோடி பாக்கி வைத்துள்ளன. கூட்டுறவு ஆலைகளில் ரூ.207 கோடி பாக்கி உள்ளது. இந்த பணத்தை விவசாயிகளுக்கு பெற்றுத்தர மாநில அரசு சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளை கைவிட்டுவிட்டது.

இதேபோல 2018-19 நடப்பு ஆண்டில் சர்க்கரை ஆலைகள் அரைத்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலையில் ரூ.350 கோடி பாக்கி உள்ளது. கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 14 நாட்களில் தர வேண்டிய பணத்தை 4 மாதங்களாக தராமல் விவசாயிகளை சர்க்கரை ஆலைகள் அலைக்கழித்து வருகின்றன. இதனால் விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் அதிக வட்டி செலுத்தி அவதிப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி மோசடி: கரும்பு ஆலை நிர்வாகத்தின் தில்லுமுல்லு அம்பலம்!

2004 முதல் 2009 வரை விவசாயிகளுக்கு கொடுத்திருக்க வேண்டிய லாபப்பங்கு தொகை சுமார் ரூ.240 கோடியை தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தராமல் ஏமாற்றி வந்தனர். கரும்பு விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். 13.2.2019 அன்று லாபப்பங்கு தொகையை தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விவசாயிகளுக்கு லாபப்பங்கு தொகையை பெற்றுத்தர நடவடிக்கை கோரி மாநில அரசுக்கு மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

மேலும் அம்பிகா சர்க்கரை ஆலை மற்றும் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து வங்கிகளில் 88.51 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ள தகவல் அம்பலம் ஆகி உள்ளது. அதே போன்று தஞ்சை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளை மோசடி செய்து போலி ஆவணங்கள் மூலம் சர்க்கரை ஆலைகள் இதுவரை 360 கோடி ரூபாய் கடன் பெற்று இருக்கின்றன. வங்கிக்கு கடன்களை ஆலை திருப்பிச் செலுத்தவில்லை.

இந்நிலையில் அந்தக் கடனுக்காக வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இப்படியாக விவசாயிகளை அடகு வைத்து கடன்பெற்று, திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மாநில சர்க்கரைத் துறை ஆணையர் அனுசார்ஜிடம் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஓராண்டுக்கு முன்பே புகார் மனு அளிக்கப்பட்டது. தற்போது சர்க்கரை ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.இவ்வாறு டி.ரவீந்திரன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories