தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் ஐவர் பலி : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின் தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் ஐவர் பலி : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மதுரையைச் சேர்ந்த வெர்ணிகா மேரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " மதுரையில் கடந்த 7ம் தேதி இரவு பெய்த கனமழையால் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் பழுதடைந்ததால் செயற்கை சுவாசம் பெற்று வந்த 5 பேர் உயிரிழந்ததாக செய்தி வெளியானது. மதுரையில் பல பெரிய மருத்துவமனைகள் உள்ள நிலையில் மின் தடை காரணமாக வேறு எங்கும் இந்த போன்ற உயிரிழப்பு ஏற்படவில்லை. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்ததற்கு காரணம் கருவிகள் முறையாக பராமரிக்கப்படாததும், மருத்துவர்களின் கவனக்குறைவுமே காரணம் ஆகும். ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐஐடி பேராசிரியர்கள், காவல்துறை உயரதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மின் பொறியாளர், உயிரி மருத்துவ பொறியாளர்களைக் கொண்ட குழு அமைத்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளை ஆய்வு செய்து, அவை முறையாக இயங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனையின் கவன குறைவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

அதே போல"தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான போதுமான அளவு உபகரணங்களை வைக்கவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கக்கோரி, மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த குரு சங்கர் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி ஆர்.சுவாமிநாதன், தண்டபாணி அமர்வு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மின் தடை காரணமாக 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான போதுமான அளவு உபகரணங்களை வைக்கவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து நிபுணர் குழுவை அமைப்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மே 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories