தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 13 மாவட்டங்களில் உள்ள 46 வாக்குச்சாவடிகளில் தவறு நடந்திருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
ஏபரல் 29-ம் தேதி இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டதாகவும் சாஹு தெரிவித்துள்ளார். மறு வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
எந்தெந்த வாக்குச்சாவடிகளில் தவறு நடந்திருக்கிறது என்பதை அவர் அறிவிக்கவில்லை. தேர்தல் ஆணைய முடிவெடுத்த பிறகே அதுபற்றி தகவல் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கெனவே 10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இப்போது மேலும் 46 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு கோரப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 10 நாள் கழித்து ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மேலும், இது பற்றி இருபது நாள் கழித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பது ஏன் என்ற கேள்வியை தி.மு.க எம்.பி. ஆர்.எஸ்.பாரதி எழுப்பியுள்ளார்.