சென்னை வில்லிவாக்கம் அருகே அன்னை சத்தியா நகர் மேம்பாலம் கீழ் இன்று காலை 8:15 மணி அளவில் குடிபோதையில் இன்னோவா காரை வேகமாக ஓட்டி வந்து மூன்று பேர் மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அதில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார்.
குடிபோதையில் கார் ஓட்டி வந்த நபரை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மேலும் காருக்குள் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு விசாரித்து வருகின்றனர்.
அருகில் உள்ள தேனீர் கடையில் டீ அருந்தி கொண்டிருந்த அன்னை சத்யா நகரை சேர்ந்த சரசா வயது 65, ஆதிலட்சுமி வயது 50 , மோகன் வயது 40 ஆகியோர் மீது கார் பின்பக்கமாக மோதியதில் சரசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் இருந்த பெண் ஆதிலட்சுமி மற்றும் மோகன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஆதிலட்சுமி தூக்கி வீசப்பட்டு கால் முறிந்தது. மோகன் என்பவருக்கு பலத்த அடிப்பட்டு உயிருக்கு போராடினார். அதன் பிறகு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மோகனை சேர்த்தனர். ஆனால் மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காருக்குள் இருந்த தேவேந்திரனை பொதுமக்கள் சிறை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்த திருமங்கலம் போக்குவரத்து போலிசார் நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து போதையில் கார் ஓட்டி வந்த தேவேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து வில்லிவாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில், அதிகாலையில் பல இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது.இதன் காரணமாகவே இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.