சென்னைக்கு வட கிழக்கே, 420 கிமீ தொலைவில் ஃபானி புயல் மையம் கொண்டுள்ளது. இது உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
அடுத்த 2 நாட்களில் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து மே 3ம் தேதி ஒடிசா மாநில பூரி அருகே கரையை கடக்கும்
இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 30-40 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். ஆகையால் மே 3 வரை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை முதல் வறண்ட வானிலையே காணப்படும்.
மேலும், ஃபானி புயல் கரையை கடந்த பின்னர் தமிழகத்தில் காலை வேளையில் அனல் காற்றும், பிற்பகலில் கடல் காற்றும் வீசக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.