கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு மழையின் அளவும் வழக்கத்தை விட குறைவாகப் பெய்துள்ளது. மழைக் குறைவினால் நீர் நிலைகளின் நீர்மட்ட அளவும் குறைந்துள்ளது. இதனால் அணைகளிலிருந்து தற்பொழுது குடிநீர் தேவைக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த சூழலில் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் வணிக ரீதியாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், கடந்த இரண்டு மாதங்களில் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து மாநில நில மற்றும் நீர் ஆதார விவர குறிப்பு தமிழகத்தில் 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் நாகை, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மட்டுமே நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள 29 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குறைந்தது 1 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் சரிந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பொதுப்பணித்துறை தரப்பில் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “குடிநீர் உள்ளிட்ட மற்ற தேவைகளுக்காக மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. எனவே, வணிக தேவைகளுக்காக நிலத்தடி நீர் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரை மெட்ரோ குடிநீர் நிர்வாகம் தாக்கியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு செய்திகள் வெளிவராமல் தடுக்க முயற்சி என்று பலர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.