அரசுப் பள்ளிகளை தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு தத்துக்கொடுக்க முடிவு செய்துள்ளது. இச்செயலை இந்திய மாணவர் சங்கம் கண்டித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில் :
“கடந்த 5 ஆண்டுகாலமாக மத்திய அரசு கல்வித்துறை மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூபாய்1,400 கோடியை வழங்கவில்லை. தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைத் தகர்க்கும் வகையில் நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஊழல் மையமாகவும், பாலியல் சீண்டல் செய்திடும் இடமாகவும் மாறியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவீத ஏழை மாணவர்களுக்குக் கட்டணமின்றி கல்வி வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம், அதற்கான கட்டணத்தைத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தரமறுப்பதால் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் நீட் தேர்வில் தொடர்ந்த குளறுபடிகள் தற்பொழுது தொடர்கிறது, எனவே நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்.
டாஸ்மாக் நடத்தும் அரசாங்கத்தால் பள்ளிகளை நடத்த முடியாதா?
தமிழக அரசு, கல்வித்துறையில் அக்கறையற்ற போக்குடன் செயல்பட்டு வருகிறது. தற்போது அரசுப் பள்ளிகளைச் சீரழிக்கும் வகையில் அதைத் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குத் தத்துக்கொடுக்க முடிவு செய்துள்ளது. இதை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் கோடி செலவு செய்வதாகக் கூறப்படும் நிலையில், அரசுப் பள்ளிகளை ஏன் நடத்த முடியவில்லை? மாறாக டாஸ்மாக்கை மட்டும் அரசு நடத்தி வருகிறது. எனவே, தனியாருக்கு அரசுப் பள்ளிகளைத் தத்து கொடுக்கும் தமிழக அரசின் செயலை கண்டித்தும், அரசே பள்ளிகளை ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், தனியார் கல்விக் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழகத்தில் 4 முனைகளிலிருந்து சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டு அரசிடம் வலியுறுத்தவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.