பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நேரத்தில் கலவரம் நடைபெறவில்லை என்பதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தொிவித்துள்ளாா்.
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்டாா்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில், வாக்குப்பதிவு மையத்தின் அருகே குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னமான பானையை உடைத்தனா். இதனைத் தொடா்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. தலித்களின் வீடுகளை மாற்று சாதியினர் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, கலவரம் நடைபெற்ற பகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என சி.சி.க தலைவர் திருமாவளவன் கருத்து தொிவித்தாா். பல தலைவர்களும் பொன்பரப்பி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மறு வாக்குப்பதிவு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நேற்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாாி சத்யபிரதா சாஹு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பின்னா் பேசிய சத்யபிரதா சாஹு, “தோ்தல் வாக்குப்பதிவின்போது பொன்பரப்பி பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என்று மாவட்ட ஆட்சியா் அறிக்கை அளித்துள்ளாா்.
குறிப்பிட்ட பகுதியில், மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்று எந்தவொரு அரசியல் கட்சியும், தோ்தல் ஆணையத்திடம் நேரடியாக கோாிக்கை வைக்கவில்லை. இதனால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு இல்லை.” எனத் தெரிவித்தார்.